ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி: காவல்துறையினர் தீவிர விசாரணை
ரயில் தண்டவாளத்தில் இருந்த இரும்பு கம்பி குறித்து போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மதுரையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு செல்கிறது. இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கேரளா நோக்கி சென்றது.
இந்த ரயில் இரவு 8 மணியளவில் ஆனைமலை அருகே உள்ள மீனாட்சிபுரம்-முதலமடை இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று தண்டவாளத்தில் ஒரு அடி உயரம் கொண்ட கம்பி கிடந்தது. அந்த கம்பியில் ரயில் மோதியதில் ரயில் பெட்டிகள் குலுங்கின. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர்.
ரயிலில் இருந்து ஏதோ ஒரு சத்தம் வருவதை கேட்டதும் என்ஜின் டிரைவர் ரயிலை நடுவழியில் நிறுத்தி கீழே இறங்கி பார்த்ததில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி இருந்ததை பார்த்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போத்தனூர் ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது ரயில் நின்ற இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் இரும்பால் ஆன கம்பி ஒன்று கிடந்தது. ரயில், தண்டவாளத்தில் இருந்த இந்த கம்பியில் மோதியது தெரியவந்தது.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மூலம் ரயில் சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கேரளா நோக்கி சென்றது. ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தின் மீது இரும்பு கம்பியை வைத்த நபர்கள் யார்? சதிவேலையில் ஈடுபட இதனை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அங்கு யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் கூறியதாவது:-
பொதுவாக தண்டவாளத்தின் ஓரத்தில் தூரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஒரு கி.மீ தூரத்துக்கு ஒரு அடி உயரத்துக்கு இரும்பால் ஆன கம்பி வைக்கப்பட்டு இருக்கும். அந்த கம்பியை தான் யாரோ எடுத்து, ரயில்வே தண்டவாளத்தில் வைத்துள்ளனர். அதன் மீது தான் ரயில் மோதி உள்ளது. இந்த கம்பியை எடுத்து வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.