அணைகளில் நீர் இருப்பு குறைவு: விவசாயம் பாதிக்கும் அபாயம்
9 அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்;
தமிழகத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் கொங்கு மண்டலத்தில் பாசனப்பரப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, பாலாறு ஆகிய 8 நதிகளை உள்ளடக்கி பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 பகுதிகளில் தடுப்பு அணைகள் உள்ளன.
இதன்மூலம் கோவை, திருப்பூரில் 4.25 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பில் விவசாயம் நடக்கிறது. இதுதவிர பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மூலம் கேரளாவில் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயமும் செழித்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலும் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். இங்கு ஆண்டுதோறும் நல்ல மழை பொழியும். இதனால் அடுத்த மாதமே 9 அணைக்கட்டுகளிலும் தண்ணீர் நிரம்பி, கோவை, திருப்பூர் மட்டுமின்றி கேரளாவிலும் விவசாயிகள் வேளாண்மையை தொடங்கி விடுவர்.
ஆனால் நடப்பாண்டில் ஜூன் மாதம் கடைசி வரையிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. பொள்ளாச்சி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.
கடந்தாண்டு இதே கால கட்டத்தில் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. 120 அடி உயரம் உடைய ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் 112 அடிக்கு தண்ணீர் இருந்தது. 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 108 அடிக்கு தண்ணீர் இருந்தது. அங்கு தற்போது 8 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
அதேபோல 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் தற்போது 18 அடிக்கு தண்ணீர் உள்ளது. அங்கு கடந்த ஜூன் மாதம் 44 அடி தண்ணீர் இருந்தது.
120 அடி உயர ஆழியாறு அணையில் தற்போது 56 அடிக்கு மட்டும் தண்ணீர் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு இதே மாதத்தில் 88 அடிக்கு நீர்மட்டம் இருந்தது.
63 அடி உயர திருமூர்த்தி அணையில் தற்போது 23 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனப்பரப்பு திட்டத்தில் தென்மேற்கு பருவமழை தள்ளிப்போவதால், கோவை, திருப்பூர் மற்றும் கேரள மாநிலத்திலும் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.