கோவையில் கஞ்சா வழக்கில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கைது செய்த போலீஸார்!

கோவையில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-03-15 14:54 GMT

பைல் படம்.

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோக்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, வீடியோவில் இருப்பது கோவையை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா என தெரியவந்தது.

அவரை போலீஸார் தேடி வந்தனர். வினோதினி மீது கடந்த 2021 ஆம் ஆண்டு கஞ்சா வைத்திருந்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் சூரிய பிரசாத் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வினோதினி என்ற தமன்னா நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்காக ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதனால், வினோதினிக்கு நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் இருந்து வீடியோ வெளியிட்ட சம்பவம் தொடர்பாக வினோதினியை தேடி வந்த நிலையில் சங்ககிரி பகுதியில் வைத்து அவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் வினோதினியை போலீஸார் ஆஜர்ப்படுத்தினர்.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் மார்ச் 29 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, போலீஸார் வினோதினி என்ற தமன்னாவை நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள வினோதினி என்ற தமன்னா ஆறு மாதம் கர்ப்பிணி ஆவார்.

Tags:    

Similar News