மேற்கு மண்டலத்தில் 15 நாட்களில் 3550 சமூக விரோதிகள் கைது: ஐ.ஜி. தகவல்
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில், கடந்த 15 நாட்களில் 3550 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஐ.ஜி. சுதாகர் தெரிவித்துள்ளார்.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் உத்தரவின்படி, கோயமுத்தூர் சரகம் மற்றும் சேலம் சரகத்திற்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களில், கடந்த ஒன்றாம் தேதி முதல் 15 ம் தேதி வரையிலான 15 நாட்களில், காவல் துறையினர் சோதனை நடத்தினர். ஊரடங்கு காலத்தில், சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட கண்காணிப்பாளர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி மதுபானம் மற்றும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டோர், கஞ்சா, போதைப்பொருள், லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 1959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 3550 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவற்றில், 1740 மதுவிலக்கு வழக்குகளில் 7508 லிட்டர் சாராயம், 19,451 லிட்டர் ஊரல், 2547 லிட்டர் கள் மற்றும் 2,12,497 லிட்டர் பிராந்தி பறிமுதல் செய்யப்பட்டன. 33 கஞ்சா வழக்குகளில் 43 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 56 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 167 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 806 நபர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய்.4,78,290 பறிமுதல் செய்யப்பட்டது. 19 லாட்டரி வழக்குகளில் 29 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி மொத்த வழக்குகளில் 110 நான்கு சக்கர வாகனங்களும், 455 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.