குடியிருப்பு வசதி கேட்டு திருநங்கைகள் கோரிக்கை
கோவை மாவட்டத்தில் அரசு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட சமூகநலத் துறை மூலமாக, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில், திருநங்கை, திருநம்பி என்னும் அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. எனவே, புதிய அடையாள அட்டை மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதியம் பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் முதற்கட்டமாக விண்ணப்பித்த 15 திருநங்கைகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அடையாள அட்டையை வழங்கினார்.
தொடர்ந்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய திருநங்கைகள், தங்களுக்கு கோவை மாவட்டத்தில் அரசு குடியிருப்பு வசதிகள் விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், குடும்ப அட்டை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.