கேரளாவில் இருந்து ரயிலில் மது கடத்தல்: கோவையில் 3 பேர் கைது
கேரளாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்களை கடத்திய 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதி மதுப்பிரியர்கள், மது கிடைக்காமல், பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். அதேபோல், பல இடங்களில் மதுக்கடத்தல் நடக்கிறது.
கேரளாவில் மதுக்கடைகள் திறந்து உள்ளதால், அங்கிருந்து கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் ரயில்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகின்றன. அவற்றை, கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில், மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அந்த ரயிலின் சோதனை நடத்தினர். அப்போது, ரயிலில் வந்த 3 பேரிடம், 17 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பிடிபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.