எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது: எஸ்.பி.வேலுமணி
குறுக்குவழியில் ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்ததால் தன் மீது கோபத்தில் உள்ளதாக பேச்சு;
கோவை ராம்நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு தொகுதி அதிமுக கோட்டை என குறிப்பிட்டார். எந்த கட்சி கூட்டணியில் இருந்தாலும், விசுவாசத்துடன் பணியாற்றுவது அதிமுக தொண்டர்கள் எனவும், கூட்டணியில் சூழ்நிலை காரணமாக கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கும், அத்தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கோவை வடக்கு தொகுதியும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் மனசாட்சியுடன் வேலை செய்துள்ளோம் எனவும், செய்துள்ள பணிகளை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார். ரஜினிகாந்த் கூட விக் வைக்காமல் வெளியே வருகிறார் எனவும், ஸ்டாலின் வீட்டிற்குள் கூட விக்குடன் இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையினால் 234 தொகுதிகளிலும் அதிமுக ஜெயிக்கும் எனவும், தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாத தலைவர் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்தார். ஸ்டாலினுக்கு அதிக கோபம் தன் மீது தான் உள்ளதாகவும், ஸ்டாலின் தன்னை தான் எதிரியாக நினைக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்டாலின் ஆட்சியை கலைக்க முயன்ற போது, திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க தயாராக இருந்தனர் எனவும், குறுக்குவழியில் ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்தோம் எனவும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சி துறையில் எந்த வேலையும் செய்யதாவர் ஸ்டாலின் தான் எனவும், சீட் கிடைக்காததால் ராஜவர்மன் தன் மீது ஊழல் புகார் சொல்கிறார் எனவும் அவர் கூறினார். எந்த காலத்திலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது எனவும், திமுகவின் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு திமுக துரோகம் மட்டுமே செய்துள்ளது எனவும், சிறுபான்மையினர் பாதுகாப்பை விட்டு தரமாட்டோம் எனவும் கூறிய அவர், சிஏஏவை நிறுத்துமாறு வலியுறுத்த எங்களால் தான் முடியும் எனத் தெரிவித்தார். வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டே அல்ல எனவும், கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டி எனவும் அவர் தெரிவித்தார்.