ஊதிய உயர்வு கோரி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் போராட்டம்
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை விடுத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். சம்பள உயர்வை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், அரசு உதவி பெறும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் 70,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் ஆனால் அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு குறைந்தளவே கிடைக்கிறது எனவும் தெரிவித்தனர்.
எம்பிபிஎஸ் முடித்து விட்டு இன்டன்சிப் செய்ய கூடிய மாணவர்களுக்கு 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அதை 30 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஸ்டைபனை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைத்து தரப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள் வருடாவருடம் 10% அதிகரித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.