உங்கள் சகோதரியாக பணிசெய்வேன்: வானதிசீனிவாசன்

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு கோவை தெற்கு தொகுதிக்கு செய்த பணிகளை சொல்ல முடியுமா? - பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி;

Update: 2021-04-04 15:59 GMT

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். டாடாபாத் ஆறுமுக்கு பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

அதற்கு முன்னதாக பேசிய வானதி சீனிவாசன், ஜெயலலிதா மறைவிற்கு ஆட்சி கலைந்து விடுமென்று நினைத்த திமுக தலைவர் ஸ்டாலினின் கனவினை அடித்து நொறுக்கி எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாத சாதனைகளை பிரதமர் மோடி செய்து கொண்டுள்ளார் எனவும், உலக நாடுகள் கையாண்டதை விட கொரோனா காலத்தை மோடி அரசு சிறப்பாக கையாண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் கோவை மக்களுக்கு செய்த பணிகளின் பட்டியலை என்னால் சொல்ல முடியும் எனக்கூறிய அவர், அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிக்கு செய்த பணிகளை சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். கோவை தெற்கு தொகுதியின் முகமாக மாற ஆசைப்படும் கமல்ஹாசன் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், திமுக தொடர்ந்து பெண்களை இழிவு செய்யும் கட்சியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். அம்மா (ஜெயலலிதா) இல்லாத இந்த சூழலில், இந்த தொகுதியில் உங்கள் அக்காவாக பணிபுரிய காத்துக் கொண்டிருக்கிறேன் எனவும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். மத்திய அரசின் திட்டங்களை இந்த தொகுதிக்கு தன்னால் பெற்றுத்தர முடியுமெனவும், தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News