தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு 'காப்பு' - கோவை போலீசார் நடவடிக்கை

கோவையில், தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்களை, பந்தயச்சாலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-01 06:30 GMT

வாகன திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார், டூவீலர்கள்.

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். கடந்த சனிக்கிழமை அன்று, உறவினரின் மாருதி 800 காரில், கோவை  அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தார். மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை முடித்து வந்து பார்த்தபோது காரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ், பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த பந்தயச்சாலை காவல்துறையினர், மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கார் திருடு போனது உறுதியானது. இதனிடையே, கருமத்தம்பட்டி அருகே போலீசார் வழக்கமான வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மாருதி 800 கார் ஒன்றை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். கார் ஓட்டுனர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சேர்ந்த ஆரோக்கிய சகாய தர்மராஜ் என்பதும், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து காரை திருடி வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி, பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆரோக்கிய சகாய தர்மராஜை கைது செய்து, காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆரோக்கிய சகாய தர்மராஜ், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருடி செல்வதும், அவற்றை ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சேர்ந்த பழனிச்சாமி என்பவருடன் இணைந்து தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

ஆரோக்கிய சகாய தர்மராஜ் அளித்த வாக்குமூலத்தின் பேரில் பழனிச்சாமியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்டு கார்கள், 2 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் மற்றும், 2 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோவை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஆரோக்கியா சகாய தர்மராஜ் மீது சென்னை, திருப்பூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News