பசுமை பரப்புக்கு பாதிப்பு வராதுங்கோ... மக்களுக்கு கோவை மாநகராட்சி உறுதி
கோவை பந்தயச்சாலை பசுமை பரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று, பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி உறுதி அளித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை பந்தயசாலை பகுதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிறுவர் விளையாட்டு பூங்காக்கள், வண்ண வண்ண விளக்குகள், நடைபயிற்சி மேற்கொள்ளவும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் இடங்கள் என பன்னாட்டு தரத்தில் தயாராகி வருகிறது.
இதனிடையே, அப்பகுதியில் பசுமைப் பரப்பு குறைக்கப்படுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாக சூழல் ஆர்வலர்களும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் குற்றம் சாட்டினர். இதனையடுத்து அப்பகுதி மக்களுடன் மாநகராட்சி ஆணையர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம், கோவை பந்தயசாலை பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது: பந்தயச்சாலை பகுதியில் மரம் வெட்டப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் மாநகராட்சி சார்பில் எந்த ஒரு மதமும் வெட்டப்படவில்லை. ஆர்டிஓ அனுமதி இல்லாமல் ஒரு மரத்தையும் வெட்ட முடியாது.
அப்படி வேறு யாரேனும், தவறுதலாக ஏதாவது ஒரு மரம் வெட்டப்பட்டு இருந்தாலும் அந்த மரத்திற்கு மாற்றாக குறைந்தது நான்கு முதல் ஐந்து மரங்கள் நடவு செய்யப்படும். பசுமைப்பரப்பு குறைக்கப்படமாட்டாது. பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.
பணிகள் முழுமையாக முடிவடைந்த உடன் முன்பு இருந்ததைவிட அதிக அளவில் பசுமைப் பரப்பை மேம்படுத்தப்படும். இனி மாநகராட்சி செயற்பொறியாளர் மாதந்தோறும் மக்களை சந்தித்து கருத்து கேட்பார். அதன்படி பணிகள் நடைபெறும். எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். இதில் ஒளிவு மறைவு என்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.