கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
கோயமுத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மநீம வேட்பாளர் கமல்ஹாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.க வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த பா.ஜ.கவை சேர்ந்த நபர்களை கலைந்து போகும் படி சொன்ன போது, அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்த பா.ஜ.கவினர் கருணாகரன், சேகர் உட்பட 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 6 வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் அவர்களிடம் இருந்து 46ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1000 மற்றும் 500 ரூபாய் பரிசு கூப்பன்கள், பா.ஜ.க தொப்பிகள், கொடிகள், வாக்காளர் பட்டியல், காசோலைகள், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 12 பேரை மட்டும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். 6 வாகனங்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.