திமுக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றுகிறது :ஜி.கே.வாசன் பேச்சு
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசும் போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். வானதி சீனிவாசனை ஆதரித்து கோவை தெப்பகுளம் மைதானத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
"பொதுவாழ்வில் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் தான் உங்களது வெற்றி வேட்பாளர் வானதி சீனிவாசன். படிப்படியாக கடின உழைப்பால் மாநில அளவில் உறுப்பில் இருந்தவருக்கு பிரதமர் மோடி அவர்கள் தேசிய அளவிலான பொறுப்பை கொடுத்து அழகு பார்த்துள்ளார் என்றால் இதைவிட தகுதியான வேட்பாளர் வேறு எவரும் இருக்க முடியாது. உங்களுடைய வேட்பாளர் மனம் படைத்தவர் மட்டுமல்ல குணம் படைத்தவர்.
தொகுதி நிலைமைகளை உணர்ந்தவர். உங்களது பிரச்சினைகளை அறிந்தவர். அதற்கேற்றவாறு சட்டமன்றத்திலே பேசி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வேட்பாளர் வானதி சீனிவாசன் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
இன்னும் சொல்லப்போனால் அவருடைய வெற்றி என்பது ஏதோ தொகுதியின் வெற்றியாக நீங்கள் நினைக்க வேண்டாம். அவரது வெற்றி தமிழகத்தில் வளர்ச்சிக்கான வெற்றியாக நாங்கள் கருதுவோம்.
அவர் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு 100 சதவீதம் மத்திய மாநில அரசினுடைய திட்டங்கள் வந்து சேரும். மத்திய அரசின் புதிய திட்டங்களை பெற்று தரக்கூடிய வேட்பாளர் தான் வானதி சீனிவாசன். திமுகவைப் பொறுத்தவரை தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கொண்டு இருக்கிறது என்ற தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.
10 ஆண்டுகள் அவர்கள் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் எந்த முறையில் இருந்தார்கள் என்பது தெரியும். திமுகவினர் தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
மகளிர் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் மத்திய மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. எனவே வெற்றி வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.