தடுப்பூசி மையத்தில் திமுக - பாஜக இடையே வாக்குவாதம்: கோவையில் பரபரப்பு
கோவையில், தடுப்பூசி மையத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து பாஜகவினர் வைத்த பேனருக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜவீதியில், துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி மையம் உள்ளது. இம்மையத்தின் முன்பு, மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்து, பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு வந்த திமுகவினர், அந்த பேனரை அகற்ற கோரி, பாஜக தொண்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் காராச்சாரமாக பேசிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை வீதி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தடுப்பூசிகள் போடும் பணிகள் சிறிது நேரம் தடைப்பட்டது.
அதிகாலையிலயே தடுப்பூசிகள் செலுத்துவதற்கு டோக்கன் வாங்கி கொண்டு பொதுமக்கள் காத்திருந்த நிலையில் , அங்கு இரு அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.