பஸ்சில் நின்று பயணம் - 'கட்டுங்க அபராதத்தை' : மாநகராட்சி கமிஷனர் அதிரடி
பயணிகள் நின்றபடி பயணித்த 4 பேருந்துகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.;
கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் காந்திபுரம் 100 அடி சாலை மற்றும் கிராஸ்கட் சாலை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரொனா விதிகளை நடைமுறைப்படுத்த, பேருந்துகளில் அதிக பயணிகளை நின்றபடி பயணம் செய்ய வைத்த பஸ்களுக்கு அபராதம் விதித்தும், பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார். பயணிகள் நின்றபடி பயணித்த 4 பேருந்துகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் கொரோனா விதிமுறைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் கூறும்போது, 'தமிழக அரசின் உத்தரவுப்படி, முககவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாயும், பேருந்துகளில் அதிக கூட்டம் இருந்தால் நடத்துனர் , மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் மொத்தம் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.; என்று தெரிவித்தார்.
காலை முதல் 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில் , மண்டலத்திற்கு 2 குழுக்கள் வீதம் 40 பேர் கொரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.