குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்: எஸ்.பி
பொள்ளாச்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை முக்கோணத்தில் சாலையோர வியாபாரம் செய்து வந்த சங்கீதா என்ற பெண்ணின் 5 மாத குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ஆனைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். வால்பாறை டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கொண்டு மேற்கொண்ட விசாரணையில் ஆனைமலையை சேர்ந்த , ராமர் (49), முருகேசன் (39) ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை பணத்திற்காக கடத்தியது தெரியவந்தது.
அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவருக்கு குழந்தை இல்லாததால் பணத்திற்காக குழந்தையை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துச்சாமியையும் தனிப்படை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தனிப்படையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து குழந்தையை மீட்ட போலீஸாருக்கு கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி மற்றும் மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி மற்றும் எஸ்.பி "கோவை மாவட்டத்தில் இதுவரை பணத்திற்காக குழந்தை கடத்தல் நடைபெற்றதில்லை. முதல் முறையாக 5 மாத குழந்தை பணத்திற்காக கடத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலையில் சாலை ஓர வியாபாரியாக உள்ள சங்கீதா என்ற பெண்ணிடம் முதல் குழந்தையை பணத்திற்காக கேட்டுள்ளனர். ஆனால் அவர் குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் குழந்தைக்கு சில்லி சிக்கன் வாங்கி கொடுக்குமாறு 50 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, குழந்தையை கடத்தி உள்ளனர். குழந்தையை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 20 கிலோ மீட்டர் தூரம் சிசிடிவி கேமரா பதிவு சோதனை செய்யப்பட்டது. ஆனைமலையை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கு 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாத்தால், ராமர் (49), முருகேசன் (39) என்பவர் மூலம் குழந்தையை கடத்தி உள்ளனர்.
இதற்காக முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம், குழந்தையை பெற்று கொண்டு ரூ.40 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தை முத்துப்பாண்டி வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பி. மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏழ்மையில் இருந்தும் அதிகம் பணம் கொடுத்தும் குழந்தையை கொடுக்காமல் இருந்த குழந்தையின் தாயை பாராட்டுவதாகவும் தெரிவித்தனxர்.
கோவையிலும் சென்னையில் இருப்பது போன்று கோவையிலும் திருநங்கைகளுக்காக தனி விடுதி அமைக்க மேலிடத்திற்கு கடிதம் அனுப்பப்படும் என்றும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.