விதைச் சான்று துறையின் தலைமையிடத்தை மாற்றக்கூடாது: ஆட்சியரிடம் பாஜக மனு

விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.;

Update: 2021-09-07 10:45 GMT

கோவை ஆட்சியரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இம்மனுவில் இச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும், சென்னைக்கு விதைச்சான்று துறையின் தலைமை இடத்தை மாற்றுவதால் விவசாயிகள் அதன் மூலம் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களை சந்திக்க  கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் பாஜக விவசாய அணி சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே நகராஜ், சென்னையில் இயற்கை விவசாயம் என்பது இல்லாத பொழுது அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை அங்கு மாற்றும் வேளாண்துறையின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் கோவையில் விவசாயம் மற்றும் விதைகளை பயன்படுத்துவோர் அதிகம் இருக்கும் நிலையில் அரசு எடுத்துள்ள இம்முடிவு கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் இத்துறையின் தலைமை இடத்தை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News