எண்டெர்டெயின்மெண்ட்க்காகவே கமல்ஹாசன் கோவை வருகிறார்: பாஜக குற்றச்சாட்டு

ஆடி 18 அன்று எந்த படப்பிடிப்பும் இருக்காது என்பதனால் என்டர்டைன்மென்ட்காக கமல்ஹாசன் கோவைக்கு வந்தார் என பாஜக குற்றச்சாட்டு.;

Update: 2021-08-04 14:30 GMT

பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த மூன்று மாத காலத்தில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பல்வேறு நல உதவிகளை மக்களுக்கு செய்துள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக கொரோனா காலத்தில் கோவைக்கு தடுப்பூசிகளை அதிகமாக தர வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியது, கோவை அரசு மருத்துவமனைக்கு அமரர் ஊர்தி வழங்கியது, தடுப்பூசி மையங்களில் ஆய்வு மேற்கொண்டது, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையையும் மத்திய அமைச்சர்களுக்கு கொண்டு சென்றது ஆகியவற்றை குறிப்பிட்டார். மேலும் கமல்ஹாசன் மூன்று மாதத்திற்கு முன்பு கோவைக்கு படப்பிடிப்பிற்காக வந்தார் எனவும், அதனைத் தொடர்ந்து மூன்று மாதம் கழித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்தார் என்று தெரிவித்தார்.

தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் தன லாபம் என்று எழுதியது மட்டும் தான் அவர் கண்களுக்கு தெரிகிறது என்று சொன்னால் அவர், இங்கிருந்து முழுமையாக மக்கள் பணிகளில் ஈடுபட வேண்டும். அவர் அதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்தார். ஆடி 18 அன்று எந்த படப்பிடிப்பும் இருக்காது என்பதனால் என்டர்டைன்மென்ட்காக கமல்ஹாசன் கோவைக்கு வருகை தந்துள்ளார் என்று தெரிவித்தார்.

கமல்ஹாசனுக்கு ஓட்டு போட்டதற்கு வெட்கப்படுகிறோம் என்றும், சில மக்கள் கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் கமல்ஹாசன் கோவையில் ஐந்து ஆண்டு காலம் வேலை செய்யட்டும், அதற்குப்பின் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்கள் வாய்ப்பளிக்கட்டும் என்று தெரிவித்தார். மேலும் கமல்ஹாசன் நட்சத்திர விடுதியில் தங்கி தான் அனைத்தையும் மேற்கொள்கிறார் என்றால், அவர் மக்களுடன் இருந்து வேலை செய்வதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்தார். மேலும் திமுக அரசால் கோவை மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கோவை தெற்கு தொகுதி அதிகமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News