உணவகத்திற்குள் புகுந்து லத்தியால் தாக்கிய உதவி ஆய்வாளர்
இரவு 11 மணி வரை உணவகம் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்று விதி உள்ள போதும் கடையை அடைக்கச் சொல்லி லத்தியால் தாக்கியுள்ளார்.
கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். நேற்று இரவு 10-20 மணிக்கு ஓசூரில் இருந்து வந்த பெண்கள் 5 பேர் மிகவும் பசிக்கின்றது என கூறியதை அடுத்து, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கின்றது. அப்போது, ஓட்டலின் ஷட்டரும் பாதி அளவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த காட்டூர் உதவி ஆய்வாளர் முத்து, உணவகத்திற்குள் உள்ளே நுழைந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கியுள்ளார். இதில், ஒரு பெண்ணுக்கு தலையிலும், ஒருவருக்கு கையில் என 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் வெளியாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இதுதொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ், காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பேருந்து நிலைய பகுதிகளில் இரவு 11 மணி வரை உணவகம் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் செயல்படலாம் என்று விதி உள்ள போது, முன்னதாகவே கடையை அடைக்கும்படி சொன்னதுடன், பெண்கள் என்றும் பாராமல் லத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லத்தியால் தாக்கிய உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.