கோயமுத்தூரில் நடிகை நமீதா நடனமாடி பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார்.மேலும் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பரப்புரை மேற்கொண்டார். கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்பொழுது பேசிய நமீதா, வானதி சீனிவாசன் இங்கு பிறந்து, இங்கு வளர்ந்து உங்களுக்காக சேவை செய்து வருகிறார் என்று தெரிவித்தார். கடந்த 5 வருடங்களில் இந்த தொகுதி மக்கள் 18 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடியின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார் என்றும் 300 பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு வருடம் பத்தாயிரம் ரூபாய் வழங்கி உள்ளார் என்றும் கூறினார்.
வானதி சீனிவாசனுக்கு வாக்களியுங்கள் என்றும் அப்பொழுது தான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்றும் தெரிவித்தார். மேலும் அவரது பிரபல வசனத்தில் "மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க. கோவையில் தாமரை மலரும் தமிழ் நாடு வளரும்" என்று தெரிவித்தார். பிரச்சாரத்திற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து நமீதா நடனமும் ஆடினார்.