ஸ்மார்ட் சிட்டி: மழையில் இடிந்து விழுந்த 12 அடி உயர தடுப்புச்சுவர்
தரமற்ற கட்டுமானமே காரணமென புகார்..!
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளத்தின் கரையில் அசோக் நகர் பகுதியில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பு சுவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த 12 அடி உயர தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இருப்பது கட்டுமான பணிகள் தரம் குறைந்தவையாக இருப்பதை காட்டுவதாகவும், இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டு இருப்பதாகவும் கூறும் அப்பகுதி மக்கள் சுவரின் உயரத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிந்த கட்டுமானமான பணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியின் அருகில் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அசோக் நகர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.