விளையாட்டு துப்பாக்கியால் சுட்டதில் காதில் புகுந்த பிளாஸ்டிக் குண்டு
- அரசு டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றம்
கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய பெண் போலீஸ் ஒருவரின் மகன் கிஷோர். 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வீட்டில் இருந்த விளையாட்டு துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டுக்கொண்டு விளையாடியுள்ளார். அப்போது, துப்பாக்கியில் இருந்த சிறிய அளவிலான பிளாஸ்டிக் குண்டு தவறுதலாக கிஷோர் காதில் சென்று சிக்கியது.
வலியால் துடித்த சிறுவனை, பெற்றோர்கள் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குண்டு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, பணியில் இருந்த உதவி இருப்பிட மருத்துவர் மணிகண்டன் மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு மருத்துவ மாணவி நித்தியா ஆகியோர் சிறுவனின் காதில் தண்ணீர் பீச்சி அடித்து பிளாஸ்டிக் குண்டை வெளியே வெற்றிகரமாக எடுத்தனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.