கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் நடைபயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று காலை அவர் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர் அங்கு நடைபெற்று வரும் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதி வந்த அவர் ஆவின் பாலகம் அமைந்துள்ள இடத்தில் டீ,காபி அருந்தி கொண்டிருந்தவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேசினார். பின்னர் 80 அடி சாலையில் உள்ள தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவர் துவங்கிய வீரமாருதி தேகபயிற்சி சாலைக்கு சென்றவர் அங்கு சிலம்ப பயிற்சி மேற்கொண்டவர்களுடன் பேசினார். தொடர்ந்து கமல் சிலம்பம் சுற்றினார்.
பின்னர் தேகபயிற்சி இடத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சின்னப்பா தேவருடன் உள்ள புகைப்படங்கள்,ஷூட்டிங் நடந்தபோது எடுத்த புகைப்படங்கள் தேகபயிற்சி ஆண்டு விழா படங்களை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து உக்கடம் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.