சசிகலா அரசியலிலிருந்து விலகியிருப்பதற்கு பாஜக பின்புலம் காரணமாக இருக்கலாம் என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கூறினார்.
கோயமுத்தூர், காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்தாண்டு கொரோனா காலத்தில் 15 கோடி பேர் வேலை இழந்தனர் எனவும், அதேசமயம் பெருநிறுவனங்கள் மேலும் பெரியதாகி வருகிறது எனவும் தெரிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையிலும், மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளிக்கவில்லை.தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு பாஜக பின்புலமாக இருக்கலாம் எனவும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் விலை உயர்வினால் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதால் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது எனவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாடு, தமிழக மக்கள் நலன், பண்பாடு பாதுகாக்க அதிமுக - பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.