பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒரு பெண் வாக்கு மூலம்
தற்போது மேலும் ஓரு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் இதுவரை 5 பெண்கள் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2019 ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டிற்கு பின் கடந்த மாதம் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் , ஹாரன் பால், பாபு, ஆகியோர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்தாண்டு கல்லூரி மாணவி ஓருவரும், அவரை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் பள்ளி ஆசிரியை உட்பட 3 பெண்களும் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேற்று முன் தினம் சி.பி.ஐ ஆஜர்படுத்திய நிலையில் , பாதிக்கபட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது மேலும் ஓரு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் இதுவரை 5 பெண்கள் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை சி.பி.ஐ ரகசியமாக வைத்திருப்பதால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் அளிக்க துவங்கி இருக்கின்றனர்.