உளவு பார்த்து என்னை முடக்க நினைக்கிறார்கள் - திருமுருகன் காந்தி
உளவு பார்த்து தன்னை முடக்க நினைப்பதாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டினார்.
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் பெகாசஸ் ஸ்பைவேர் எனும் செயலி மூலம் பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கண்காணிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதில், எனது மொபைல் தரவுகள் வேவு பார்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பத்திரிகையாளர்கள் முக்கிய பிரபலங்கள் உட்பட 50 பேர்களின் செல்போன் தரவுகளை மோடி அரசு எடுத்துள்ளது.
இதன் மூலம் மொபைல், கம்யூட்டர்களில் உள்ள இமெயிலில் நுழைந்து தகவல்களை பார்க்கவும், அதை செயல்படுத்தவும் முடியும். புகைபடங்கள் போன்றவற்றை கண்காணிக்கவும், எடுக்கவும் முடியும். செல்பேசியை உளவு பார்க்க அவசியம் என்ன? மக்களுக்காக போராடுபவர்கள் மீது இந்த உளவு பார்க்கும் வேலையை மத்திய அரசு செய்கின்றது. இதை அனுமதித்து விட்டால் யார் மீது வேண்டுமானாலும் இந்த செயலியை வைத்து தவறான தகவல்களை பதிவு செய்து சிறையில் அடைத்துவிட முடியும்.
உளவு பார்ப்பதன் மூலம் எங்களை முடக்கப் பார்க்கிறார்கள். 7 ஆண்டுகளாக பிரதமர் ஊடகத்தை சந்திக்கவில்லை, ஆனால் இப்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதத்திற்குள் ஊடகங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என சொல்கின்றார் , ஆனால் இதை பயன்படுத்தி 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்களை அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருக்கிறரகள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என தெரிவித்தார்.