இருசக்கர ரோந்து வாகனங்களில் 3 மாதத்தில் ஜிபிஎஸ் கருவி: கோவை எஸ்.பி. தகவல்

அனைத்து இருசக்கர ரோந்து வாகனங்களிலும், 3 மாதத்துக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என்று, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-09 15:59 GMT

கோவை,  அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , போலீசாருக்கு ரோந்து இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

கோவை புறநகர் பகுதிகளில்,  காவலன் செயலி மூலம் அதிக புகார்கள் வரும் காவல் நிலையங்களுக்கு,  புகார்களை விரைந்து சென்று விசாரிக்க ஏதுவாக, ஒலிபெருக்கி, முகப்பு விளக்குகள், மைக் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி, கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கலந்து கொண்டு இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறியதாவது: அடுத்த 3 மாதங்களுக்குள் புறநகர் காவல் நிலையங்களில் உள்ள இருசக்கர ரோந்து வாகனங்களில், ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கப்படும். புறநகர் பகுதிகளில் உள்ள 15 பெரிய காவல் நிலையங்களுக்கு தலா 2 இருசக்கர ரோந்து வாகனங்களும், 20 சிறிய மற்றும் நடுத்தர காவல் அளவிலான காவல் நிலையங்களுக்கு தலா ஒரு இருசக்கர ரோந்து வாகனமும் என 50 இருசக்கர ரோந்து வாகனங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

இதன் மூலம் புறநகரில் பெருமளவு குற்றங்களை குறைக்க முடியும். ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் குற்றங்களுக்காக தினசரி 36 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புறநகர் பகுதிகளில் ஊறல் காய்ச்சுவது, கேரளாவில் இருந்து கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News