மளிகைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார்
மளிகை கடை வைத்திருப்பவர்கள் உரிய விலைக்கே மளிகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.;
கோவையில் ஆட்டோக்கள் மூலம் மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்காக விநியோகஸ்தர்கள் ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்களை வாங்க குவிந்தனர். கொரோனா இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மளிகை கடைகள் காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் பல்வேறு காய்கறிகள், மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தள்ளு வண்டிகள் ஆட்டோக்கள் மூலம் மளிகை பொருட்களை வினியோகம் செய்வதற்காக வினியோகஸ்தர்கள் ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்களை வாங்கினர். அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் மூலம் விநியோகஸ்தர்கள் மளிகை பொருட்களை வாங்கினர். ஆனால் அதில் பல்வேறு கடைகளில் அதிக விலைக்கு மளிகை பொருட்களை கடைக்காரர்கள் விற்பனை செய்ததால் குறைந்த அளவிலான மளிகை பொருட்களை வாங்கி மக்களுக்கு வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளுக்கும் தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மளிகை கடை வைத்திருப்பவர்கள் உரிய விலைக்கே மளிகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.