பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.
கோயமுத்தூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தங்கவேல் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது அக்கட்சி தலைவர் கமல்ஹாசனும் உடன் இருந்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,மநீம பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் காரணமா என்ற கேள்விக்கு, அரசியல் காரணமாக இருக்கலாம். அவர்கள் பதில் சொல்லட்டுமென பதிலளித்தார்.
பஸ்சில் சென்று கொண்டிருந்த என்னை மக்கள் தான் ஹெலிகாப்டரில் செல்ல வைத்துள்ளனர். அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. எனது பணத்தில் தான் செல்கிறேன். இதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பல இடங்களில் தடங்கல் செய்யப்படுகிறது. கல்லூரிகளில் மாணவர்களிடம் நான் பேசி விடக்கூடாது என பூடகமாக சொல்லப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் செல்ல தான் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன். வேட்பாளர்களுக்கு தோள் கொடுக்க இத்தனை இடங்களுக்கு செல்கிறேன்.
எல்லோரும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர், எங்களது தேர்தல் அறிக்கை வருவது நல்லது தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னதை மற்றவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நல்ல விஷயங்கள் மக்களுக்கு கிடைக்க மநீம முன்னோடியாக உள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக மக்கள் நீதி மையம் திகழ மக்கள் உதவ வேண்டும் என அவர் கூறினார்.