காழ்புணர்ச்சியோடு நடத்தப்படும் ரெய்டுகளை சட்ட ரீதியாக சந்திப்போம்: எஸ்.பி.வேலுமணி
எங்களை காழ்புணர்ச்சியோடு பழிவாங்குகிறார்கள். ஆனால் மக்களை பழிவாங்க கூடாது.;
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசையும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, "கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட வேலை உத்தரவுகளை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஸ்மார்ட் சிட்டி, பால வேலைகள் மெதுவாக செய்யப்பட்டு வருகின்றன. எங்களை காழ்புணர்ச்சியோடு பழிவாங்குகிறார்கள். ஆனால் மக்களை பழிவாங்க கூடாது. நிறுத்தப்பட்டுள்ள வேலைகளை செய்ய வேண்டும். காழ்புணர்ச்சியோடு நடத்தப்படும் ரெய்டுகளை சட்ட ரீதியாக சந்திப்போம்" என அவர் தெரிவித்தார்.