கோவையில் ஒரு மணி நேரம் கனமழை ; வெள்ளநீரில் சிக்கிய வாகனங்கள்
கோவையில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் கார், பேருந்து சிக்கியது
வட கிழக்கு பருவ மழை காரணமாக கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ரயில் நிலையம், காந்திபுரம், லட்சுமி மில், புளியகுளம் ,வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.அனைத்து சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானி பள்ளி, கோவை அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அவிநாசி சாலை மேம்பால சுரங்கப்பாதையில் ஒரு காரும், அரசு மருத்துவமனை சுரங்கப்பாதையில் ஒரு பேருந்தும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.