திருமண மோசடி செய்ததாக காவலர் மீது இளம்பெண் புகார்
Coimbatore latest news தன்னை திருமணம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக சிறைக்காவலர் ரவிக்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு.
கோவை சூலூரை சேர்ந்த 29 வயது இளம்பெண். இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார். அப்புகாரில் கோவையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருவதாகவும், தனது தந்தை கோவை மத்திய ஜெயிலில் உதவி ஜெயிலராக வேலை பார்த்து வருவதால் ஜெயில் வளாகத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது ஜெயிலில் காவலர் வேலை பார்த்த ரவிக்குமார் என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் ஒருவருக்கொருவர் விரும்பிய நிலையில் ரவிக்குமார் தன்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தத்தாகவும் அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.
Coimbatore latest news
மேலும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ரவிக்குமார் திருப்பூருக்கு மாறுதலாகி சென்ற நிலையில், அப்பெண்ணின் வற்புறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 28-ம் தேதி பொள்ளாச்சி மாசானியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.திருமணத்திற்கு பிறகு இருவரும் அலைபாயுதே பட பாணியில் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை ரவிக்குமாரின் வீட்டிற்கு அழைத்து செல்ல பாதிக்கப்பட்ட பெண் அழுத்தம் கொடுத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார் ரவிக்குமார். பின்னர் பெற்றோரின் தூண்டுதலின் பேரில் வேறொரு திருமணம் செய்ய ரவிக்குமார் ஆயத்தம் ஆனதாகவும், இதுதொடர்பாக தான் முறையிட்டபோது ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் அப்பெண் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் காவலர் ரவிக்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் மீது கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பந்தய சாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.