தமிழக மீனவர்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும்: முத்தரசன்
தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களா, இல்லையா என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்;
கோவையில் உள்ள அக்கட்சியின் அலுவலகமான ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிஐ அகில இந்திய மாநாடு 2022ம் ஆண்டு அக்டோபர் 18 முதல் விஜயவாடாவில் 5 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இதன் முன்னோட்டமாக வருகிற ஜனவரி மாதம் கோவை பீளமேட்டில் 3 நாட்கள் தேசிய குழு உறுப்பினர்கள் கூடி மாநாட்டில் இறுதி செய்யப்பட உள்ள அறிக்கைகளை முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சி, ஜனநாயக விரோதமான முறையில் நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டிய அவர், நாடாளுமன்றத்தில் பல்வேறு சட்டங்களை ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பத்தின் அடிப்படையில் நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற விவகாரத்தில் மோடி பதவி விலகியிருக்க வேண்டும் எனக்கூறிய அவர், இதற்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்ததால் ராஜாஜி ராஜினாமா செய்ததை சுட்டிக்காட்டினார்.
லக்கிம்பூர் விவகாரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்குழு கூறிய பிறகும் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிய அமைச்சர் இதுவரை பதவி விலகவில்லை என அவர் குற்றம்சாட்டினார். சிறு, குறு தொழில்கள் மூலப்பொருள் விலை உயர்வால் முடங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது எனவும் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ் சின் துணை அமைப்பாக மாறிவிட்டது எனவும் அவர் விமர்சித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும் வகுப்புவாதத்தை எதிர்ப்பதால் திமுகவை கொள்கை ரீதியாக ஆதரிப்பதாகவும், அதற்காக மென்மையான போக்கை கடைபிடிப்பதாக எண்ணக்கூடாது எனவும் அவர் கூறினார். இல்லம் தேடி கல்வி, செவிலியர் இட ஒதுக்கீடு தொடர்பாகவெல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். மோடி அரசு ஹிட்லரை போல ஒரு பாசிஸ்ட் அரசு என விமர்சித்த அவர், இதற்காக வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை எனவும் குறிப்பிட்டார்.
தன் மீது குற்றம் இல்லை என்றால் ஏன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளிய வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், அவர் ஓடி ஒளிய வேண்டிய அவசியமும் இல்லை, காவல்துறை இவ்வளவு கால தாமதம் செய்ய வேண்டியதும் இல்லை எனவும் குறிப்பிட்டார். உலகில் எந்த மீனவர்களுக்கும் நடக்காத துன்பம் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களா இல்லையா என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசாக மத்திய அரசு இருப்பதாக விமர்சித்த அவர், அவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், தமிழக மீனவர்கள் தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.