பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம்

பாலியல் ரீதியாக மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்திருந்தனர்.

Update: 2021-11-19 09:15 GMT

பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் ரகுநாதன். இவர் பாலியல் ரீதியாக மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கல்லூரி வாயிலில் அமர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது எனவும், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர். கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழை பெய்த நிலையிலும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Tags:    

Similar News