கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் பெங்களூருவில் கைது
கோவை மாணவி தற்கொலை வழக்கில் பெங்களூருவில் பதுங்கி இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.;
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது போலீசாருக்கு கிடைத்தது. அதில், "யாரையும் சும்மாவிடக்கூடாது" என்று குறிப்பிட்டு, ரித்துவின் தாத்தா, எலிசா சாருவுன் தந்தை மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியரை குறிப்பிட்டுள்ளார். பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக்கோரி, நேற்று பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தேடி வந்தனர்.
இதனையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீரா ஜாக்சனை கோவை அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் உடலைப் பெற பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.