செஸ் சின்னத்தை பிரம்மாண்டமாக உப்பில் வரைந்த பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளனர்.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டியின் துவக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் "செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'செஸ் தம்பி' என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம்சொல்லி வரவேற்பதை போல அந்த சின்னம் அமைந்துள்ளது.
இந்த சின்னத்தை பிரபலப்படுத்தி வருகிறது தமிழக அரசு இந்த சூழலில் கோவை மணியகாரம்பாளையத்தில் அமைந்துள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் சின்னத்தை 40 அடி உயரம் 20 அடி அகலத்தில் வண்ண வண்ண உப்பை கொண்டு வரைந்துள்ளனர். 40 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் இந்த சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெறுவது பெருமையளிப்பதாகவும், இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சின்னத்தை வரைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கேம்போர்டு பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சியல் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.