லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல்: "அதிரடி சரஸ்வதி " கைது
இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் "அதிரடி சரஸ்வதி " கைது.;
சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் அதிரடி சரஸ்வதி.
கோவை செல்வபுரம் அருகே சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் அதிரடி சரஸ்வதி. இந்து மக்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்த அவர் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனியாக அமைப்பு நடத்தி வருகின்றார். திருப்பூரில் மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் அவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைப்பினை நடத்தி வருகின்றார். நேற்று அதிரடி சரஸ்வதி , காளி ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார்.
இந்த வீடியோ வெளியான நிலையில் கோவை செல்வபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மகளிர் விடுதியில் தங்கியிருந்த அதிரடி சரஸ்வதியை கைது செய்த செல்வபுரம் போலீசார் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்திருக்கும் செல்வபுரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய காளி ஆவணப்பட காட்சிகளை நீக்காவிட்டால் சென்னை வந்து லீனா மணிமேகலை மீது தாக்குதல் நடத்த போவதாக சரஸ்வதி மிரட்டல் விடுத்து இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.