குடியரசு தின விழா: கோவை ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்திய நாட்டின் 73 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் சமாதான புறாவை பறக்க விட்டனர்.
அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அலுவலர்கள், மருத்துவர்கள், முன் களப் பணியாளர்கள் 303 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முறை கொரோனா தொற்றால் நிலவும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவிக்கும் பொருட்டு அவரவர் வீட்டிலேயே சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தனார்கள்.
மேலும் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகளும் கிராம சபை கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. அதே சமயம் கோவை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் வ.உ.சி மைதானத்தில் நடைபெற குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.