குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
மோசடி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய காலம் தாழ்த்துவதாக ஆய்வாளர் மீது புகார் எழுந்தது;
கோவை மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளராக இருப்பவர் கலையரசி. இவர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்தபோது, பல்வேறு நிறுவனங்கள் மீது ஏராளமான பொதுமக்கள் மோசடி புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பந்தப்பட்ட மோசடி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய காலம் தாழ்த்துவதாக, அப்போது மேற்கு மண்டல காவல் துறை துணை தலைவர் முத்துச்சாமிக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்தன.
இதனையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்த விசாரணை அறிக்கையை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமியிடம் அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
அதில் ஆய்வாளர் கலையரசி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்தபோது மோசடி நிறுவனங்கள் மீது பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மிகவும் கால தாமதமாகவே வழக்கு பதிவு செய்ததும், சில நிறுவனங்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததாகவும் குறிபிடப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் அளித்த அறிக்கையின்படி, முறையாக பணி செய்யாமல் இருந்த கலையரசியை பணியிடை நீக்கம் செய்து, கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.