கோவையில் அம்பேத்கர் சிலை வைக்க கோரி, அம்பேத்கர் முகமூடி அணிந்தபடி மனு
அம்பேத்கர் முகமூடி அணிந்தபடி வந்த சமூக நீதிக் கட்சியினர், ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.;
அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அம்பேத்கர் முகமூடி அணிந்தபடி வந்த சமூக நீதிக் கட்சியினர், ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கோவை மாநகர பகுதியில் பொது இடத்தில் அம்பேத்கர் சிலை இல்லாத நிலையில், மாநகராட்சி தீர்மானப்படி சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பல்வேறு காரணங்களை கூறி சிலை அமைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும், அம்பேத்கரை கெளரவிக்கும் வகையில் உடனடியாக சிலை அமைக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.