கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.;
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், 'முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மாவட்டங்கள் தோறும் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் ஆய்வுக்கூட்டம் அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. இங்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில், அரசு நிர்வாகத்தின் சார்பில் 7368 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் 4691 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவை மாவட்டத்தில் 12059 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் மொத்தம் 4397 ஆக்சிசன் படுக்கைகள், தீவிர சிகிச்சையில் 853 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் அதனை உடனடியாக தயார் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கோவையை பொருத்தவரை 27 லட்சத்து 90 ஆயிரத்து400 பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நிலையில் 27 இலட்சத்து 2, 946 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மீதும் உள்ள 87,454 பேருக்கு இல்லங்களில் தேடிச்சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது. 81 விழுக்காடு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 7000 முதல் 9000 வரை கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதனை 12,000 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில் 15-18 வயதுடையவர்களில் 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 752 பேர் மட்டுமே தற்போது வரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் ஊரடங்கு போடப்பட்டுவதால் அதற்கு முந்தைய தினம் அதிகமாக மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் இயன்றவரை தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடைகளை பொருத்தவரை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி நடைமுறைகள் செயல்படுத்தப்படும். கோவையிப் 70,950 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டியவர்கள், 1671 பேர் தற்போது வரை செலுத்திக் கொண்டு உள்ளனர். ஒமிக்ரான் பரிசோதனை செய்ய அரசின் சார்பில் 2 லேப் தற்போது உள்ளது. தனியார் லேப்கள் 28 உள்ளது. வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கும் தடுப்பூசி தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் ஆலோசனை செய்வதாக கூறி உள்ளனர் அவர்கள் கலந்தாலோசனை செய்து விட்டு கூறினால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு எடுக்கும் என தெரிவித்தார்.