தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்கு இந்த 50 சதவீத ஊதியமும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2021-12-24 09:30 GMT

பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டம்.

தேசிய பஞ்சாலை கழகமான என்.டி.சி சார்பில் நாடு முழுவதும் 23 ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தில் 7 ஆலைகளும், கோவையில் மட்டும் 5 ஆலைகளும் இயங்கி வருகிறது. இந்த ஆலைகள் கடந்த மார்ச் 24ம் தேதி கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக முழுமையாக அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலைகளை இயக்க நிர்வாகம் முன்வராத நிலையில், அதிகாரிகளுக்கு முழு சம்பளமும், ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளமும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்கு இந்த 50 சதவீத ஊதியமும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள 7 ஆலைகளிலும் இன்று ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை காட்டூரிலுள்ள தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 2 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக சேவ் என்.டி.சி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் கூறும் போது, கொரோனா காலம் காரணமாக மூடப்பட்ட பஞ்சாலைகளை திறந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என 2 முறை மத்திய அமைச்சர்களை சந்தித்து முறையிட்டும், இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்ற நிலையில், தற்போது ஊழியர்களுக்கான ஊதியத்தையும் தராமல் நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக தெரிவித்தார்.

இதனை கண்டிக்கும் வகையில் சேவ் என்.டி.சி அமைப்பு கோவையில் வருகிற ஜனவரி 4ம் தேதி கூடி ஆலோசிக்க உள்ளதாகவும், 5ம் தேதி தொழிற்சங்கங்களை இணைத்து பெருந்திரள் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளில் மகராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாலை தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ள உள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதே போல் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கஜா மில்லில் தொழிலாளர்கள் ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து என்டிசி நிர்வாகம் ஒரு வாரத்தில் சம்பள தொகை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News