மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து குறுந்தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டம்
மூலப் பொருட்களின் விலை சுமார் 100 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சுமார் 100 சதவீதம் அளவிற்கு விலை உயர்வு இருப்பதாக தொழில்துறையினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக இந்த மூலப் பொருட்கள் விலையேற்றமும் இருப்பதாக தொடர்ந்து தொழில் துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் இன்று ஒரு நாள் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக தற்போது கோவையில் தொழில் கூடங்களை அடைத்து தொழில்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் இயங்கிவரும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 6 லட்சம் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து தொழில் கூடங்களை இயக்க முடியும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் பெறும்போது பெரும் பொருளாதார இழப்பை சந்திப்பதாக தொழில் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசு விலைகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக கோவையில் இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக தொழில்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.