தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை விசாரணை நடத்தி மருத்துவமனையை மூட வேண்டுமென ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகாரளித்தார்.

Update: 2024-06-12 14:00 GMT

ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தர்ணா

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற ராஜா. இந்த நிலையில் கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற ராஜா, அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அந்த மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் ராஜாவை பிடித்து விசாரித்தாகவும், அப்போது அவரை காவலாளிகள் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ராஜா மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கொலை வெறி தாக்குதல், காயங்கள் ஏற்படுத்தும் அளவிற்கு தாக்குதல், உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பை சேர்ந்த 15 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய நிலையில், மருத்துவமனை துணை தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்க துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ், சரவணகுமார், செக்யூரிட்டி மணிகண்டன், ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் ஆகிய எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் மருத்துவமனையில் நடைபெற்றதால் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை இது குறித்து விசாரணை நடத்தி மருத்துவமனையை மூட வேண்டுமென ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் 10 நாட்களுக்குமுன்பு கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில் மனு அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறி சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுப்பட்டார். தர்ணாவில் ஈடுப்பட்ட அவர் மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசு அதிகாரிகள் செயல்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News