சயனைடு கலந்த மதுவை கொடுத்து மூவரை கொன்ற கொலையாளி கைது
முன்பகை காரணமாக மதுவில் விஷம் கலந்த அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) கைது செய்யப்பட்டுள்ளார்.;
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), சக்திவேல் (60). இருவரும் பெயிண்டர்களாக பணி புரிந்து வந்தனர். தென்காசியை சேர்ந்தவர் முருகானந்தம் (55). முருகானந்தம் சமையல்காரராக பணியாற்றி வந்தார். கோவையில் தங்கி இருந்ததில் இவர்களுடன் நண்பராகியுள்ளார். நண்பர்களான மூவரும் அவ்வப் போது ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மது அருந்தி கொண்டாட முடிவு செய்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மறுநாள் விடுமுறை என்பதால் கூடுதலாக மது அருந்த எண்ணி மாலை 6.30 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மது வாங்கி வந்து பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.
விடிய விடிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர். காலையில் மது அருந்தி முடித்தவுடன் சக்திவேல் தனது வீட்டுக்கு கிளம்பியுள்ளார். மூவரும் அப்பகுதியை விட்டு கிளம்பியுள்ளனர். சக்திவேல் போதை அதிகமானதால் செல்லும் வழியில் கீழே அமர்ந்துள்ளார். உட்கார்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரைத் தொடர்ந்து முருகானந்தம் வழியிலேயே சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு புகார் அளித்த நிலையில், போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பார்த்திபன் தனது வீட்டருகே இறந்த நிலையில் கிடந்தார். பின்னர் அவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியிலுள்ள தடயங்களை எடுத்துச் சென்றனர்.
ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விடிய விடிய மதுபானம் அருந்தியதால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் குடித்த மதுவில் சயனைடு விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. முன்பகை காரணமாக வெளிநாட்டு மதுவில் சயனைடு விஷம் கலந்து கொடுத்த அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.