தனியாக இருந்த முதியவர்களை தாக்கி 30 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை
4 பேர் கொண்ட கும்பல், ராஜசேகர் மற்றும் சாந்தியை தாக்கி கொள்ளையடித்துச் சென்றது.;
கோவை ராமநாதபுரம் ஆல்வின் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர் - சாந்தி தம்பதி. இவர்களின் மகள்கள் இருவரும் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். ஆல்வின் நகரில் ராஜசேகர் சாந்தி தம்பதி மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், ராஜசேகர் மற்றும் சாந்தியை தாக்கி விட்டு பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதில் ராஜசேகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சாந்தி காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த இராமநாதபுரம் போலீசார் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த நான்கு பேரும் ஆங்கிலத்தில் உரையாடி உள்ளனர். சரளமாக 4 பேரும் ஆங்கிலத்தில் உரையாடியதாக தம்பதியினர் போலீசாரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் நன்கு படித்த நபர்களாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.