ஜி.எஸ்.டி வரி விதிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு : தமிழக நிதி அமைச்சர் தகவல்
GST problems and remedies finance minister announced;
கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் சார்பில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், ஜி.எஸ்.டி சேவை மையத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆலோசனை வழங்க வலியுறுத்தப்படும் என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் சார்பில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதில் கோவையின் பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்களும், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர். தொழில் ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் குறித்து தொழில் அமைப்பினர் நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். குறிப்பாக மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி ,இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல சிறு,குறு தொழில் முனைவோரும் தங்களுக்கு ஜி.எஸ்.டியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தினர்.
இதனைதொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,
தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முதல்அமைச்சர் ஸ்டாலின் சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார். சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு
நிதி ஆதாரம், தொழிலாளர்கள் ஆகிய இரண்டு விஷயங்களும் மிகவும் அவசியம் என தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உயர் கல்வி துறையில் தொழில் சார்ந்த படிப்புகள் வழங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அவற்றை நிரப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.தேசிய சராசரியைவிட தமிழகத்தில் உயர்கல்வி பயில சேரும் மாணவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது எனவும், அது மட்டுமே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுதராது எனக்கூறிய அவர், மாணவர்களை திறன்பெற்றவர்களாக மாற்றுவது அவசியம் எனவும் தெரிவித்தார். தற்போது ஆண்டுதோறும் 1.50 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை நிறைவு செய்கின்றனர், அவர்களில் பெரும்பாலனோர் முதல்தலைமுறை பட்டதாரிகளாக உள்ளனர், அவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. சேவை மையத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆலோசனை வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்த அவர், மதுரையில் அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார். தற்போது 100 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறித்து மதுரை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், இது தவிர தொழில்துறையினரின் கோரிக்கைகளும் அந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை அறிவிக்கும் 80 சதவீத திட்டங்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சென்றடைவது இல்லை எனவும் அந்த திட்டங்களின் பலனை அவர்கள் அனுபவிப்பது இல்லை எனவும் தெரிவித்த அவர், வங்கிகள், தொழில்நிறுவனங்கள், அரசு ஆகியற்றுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார். அரசின் வரி விதிப்பில் நேரடி வரி 60 சதவீதமாகவும், மறைமுக வரி 40 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது எனக் கூறிய அவர, இதனால் ஏழை மக்கள் அதிகம் செலவிட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தொழில் நிறுவனங்கள் அருகே தங்கும் விடுதிகள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அடுத்த கட்டமாக தனியார் பங்களிப்புடன் மேலும் விடுதிகள் விரிவு படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வரும் முன்பு வாட் வரியில் (மதிப்பு கூட்டு வரி) வணிக நட்புறவான சமாதான திட்டம் நடைமுறையில் இருந்தது எனவும், ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு வரி சலுகையை மாநில அரசால் வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் நிலுவையில் உள்ள வாட் வரித் தொகையை வசூலிக்க உதவும் நோக்கத்துடன் சமாதான் திட்டத்தை விரைவில் அமல்படுத்த இருக்கின்றோம் எனவும் எனவும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.