ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.;
கோவை அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் ரோலிங் டப் கபே என்ற ஐஸ்கிரீம் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பதின் பருவ வயதினர் அதிகளவில் இந்த கடைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. ஐஸ்கிரீம்களில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று இந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மதுபாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் இந்த ஆய்வின் போது கடையில் உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை என்பதும், உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டதுடன் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இல்லை என்பதும் தெரியவந்தது. அதேபோல உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறை அணிந்து பணி புரியாததுடன், உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப் படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கும் அதிரடியாக சீல் வைத்தனர்.