கோவை நொய்யலாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-12 07:18 GMT

கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மழையின் தாக்கம் என்பது முதலில் குளங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் எதிரொலிக்கும். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் அனைத்தும் கணிசமாக நிரம்பிவிட்டன.

நொய்யல் ஆற்றை பொறுத்தவரையில் நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து ஆர்ப்பரிக்கிறது. நொய்யல் ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து பேரூர் படித்துறை பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் இடமான தர்ப்பணம் மண்டபத்தில் வெள்ள நீர் புகுந்து உள்ளதால் அங்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . இதனால் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படித்துறை அருகில் செல்ல வேண்டாம் எனவும், மேலும் கரையோர மக்கள் குளிக்கவோ செல்பி எடுக்கவும் துணி துவைக்கவும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேரூர் பகுதியில் இருந்து செல்லும் நொய்யலின் ஓட்டம் நகர்ப் பகுதியில் பல்வேறு பகுதிகள் வழியாக செல்கிறது. குறிப்பாக நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு மையல் நீர்வரத்து அதிகரிப்பால் ஆர்ப்பரிக்கிறது. செந்நிறத்தில் நீரோட்டம் ஆர்ப்பரிக்கிறது. நஞ்சுண்டாபுரம் எல்லையில் உள்ள கீழ் அணைக்கட்டு மேல் அணைக்கட்டு என இரண்டும் முழுவதும் தண்ணீர் நிரம்பி ஆர்ப்பரிக்கிறது.

நஞ்சுண்டாபுரம் கடந்து செல்லும் இந்த நொய்யல் ஆற்று நீர், வெல்லனூர் பகுதி வழியாக செல்லும். இந்நிலையில் வெள்ளலூர் மற்றும் மனதின் தாவரத்திற்கு இணைப்பு சாலையாக உள்ள பகுதியின் வழியே நொய்யல் நீர் செல்லும் நிலையில், நஞ்சுண்டாபுரம் ரயில்வே கேட் பாதையில் இருந்து வெள்ளலூர் ஊருக்குச் செல்லும் இணைப்பு சாலையில் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் சில கிலோமீட்டர்கள் கூடுதலாக பயணித்து ஊருக்குள் செய்கின்றனர்

அதேபோல சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் கடந்த வாரம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் பாலம் லேசாக மட்டுமே அரிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது நொய்யலில் நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளதால் தரைப்பாலம் இருந்த சுவடே தெரியாத அளவிற்கு தற்போது நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை தொடரும் பட்சத்தில் நொய்யலில் நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் கரையோர மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News