மீன்வளத்துறை ஆணையரின் அரசாணையை திரும்பப் பெறக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீா் நிலைகளில் மீன்பாசி குத்தகையை பொது ஏலம் விட வேண்டும் என்று அரசாணை வெளிவந்துள்ளது.
கால்நடை பராமரிப்பு மீன்வளத் துறை 17-11-1993இல் வெளியிட்ட அரசாணை எண் 332 இன்படி மீன்பாசி குத்தகையில் மீனவா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீனவா் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள உறுப்பினா்கள் ஒன்றிணைந்து அரசு நிா்ணயிக்கும் குத்தகைத் தொகையை செலுத்தி நீா்நிலைகளில் மீன்களை வளா்த்து விற்பனை செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த டிசம்பா் 22ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும், மீன்வளம், மீனவா் நலத் துறை ஆணையா் அனுப்பிய சுற்றறிக்கையில், நீா் நிலைகளில் மீன்பாசி குத்தகையை பொது ஏலம் விட வேண்டும் என்று அரசாணை வெளிவந்துள்ளது. இதற்கு மீனவர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை வட்டத்தில் உள்ள நீா் நிலைகளில் மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்பட்டால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீன் பிடிப்பது போல் வலைவிரித்து, வலையில் மீன்களை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தனியாருக்கு ஏலம் விடக்கூடாது எனவும், பொது ஏலம் நடத்தக்கூடாது எனவும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.